முல்லைப்பாட்டு – அறிமுகம்
முல்லைப்பாட்டு – அறிமுகம் பாட்டும் புலவரும் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் பல புலவர்களால் இயற்றப்பட்ட பல பாடல்களின் தொகுப்பாகிய எட்டு நூல்கள் எட்டுத்தொகை என்றும் பத்து நீண்ட பாடல்கள் பத்துப்பாட்டு என்றும் அழைக்கப்படுகின்றன . பத்துப்பாட்டில் உள்ள பாடல்களில் முல்லைப்பாட்டும் ஒன்று . அது 103 அடிகளைக்கொண்ட சிறிய பாடல். இப்பாடல் ஆசிரியப்பா வகையைச் சார்ந்தது . முல்லைப்பாட்டை இயற்றிய புலவரின் பெயர் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார். இவருடைய இயற்பெயர் பூதன் . இவருடைய பெயருக்கு முன் சிறப்புப் பொருளைத்தரும் ” ந ” என்னும் எழுத்தையும் , பெயருக்குப்பின் , உயர்வைக் குறிக்கும் “ ஆர் ” விகுதியையும் சேர்த்து இவர் நப்பூதனார் என்று அழைக்கப்பட்டார் . நக்கீரனார் , நக்கண்ணையார் , நத்தத்தனார் , காக்கை பாடினியார் நச்செள்ளையார் முதலிய பெயர்களில் ” ந ” என்னும் சிறப்பு எழுத்து இடம்பெற்றிருப்பதுபோல் இவர் பெயரிலும் இடம்பெற்றுள்ளது . இவர் இயற்றியதாக முல்லைப்பாட்டு மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது . இவர் தந்தையா...