முல்லைப்பாட்டு கூறும் செய்திகள்


முல்லைப்பாட்டு கூறும் செய்திகள்
திருமால்
மாயோன் மேய காடுறை உலகமும்என்ற தொல்காப்பிய நூற்பாவிலிருந்து (தொல்காப்பியம், 951)   முல்லை நிலத்திற்குரிய தெய்வம் திருமால் என்பது தெரியவருகிறது. முல்லைத்திணையைச் சார்ந்த முல்லைப்பாட்டின் முதல் மூன்று அடிகளில் திருமாலின் திருவுருவத்தைக் குறிப்பிடுவது மட்டுமல்லாமல், அவர் வாமன அவதாரம் எடுத்து மாபலிச் சக்கரவர்த்தியைக் கொன்றதாகக் கூறப்படும் புராணச் செய்தியும் கூறப்பட்டிருக்கிறது.
நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர்செல நிமிர்ந்த மாஅல் போலப்                    (1-3)
 
இறை வழிபாடு
அருங்கடி மூதூர் மருங்கில் போகி,
யாழ்இசை இனவண்டு ஆர்ப்ப, நெல்லொடு,
நாழி கொண்ட, நறுவீ முல்லை
அரும்பு அவிழ் அலரி தூஉய், கைதொழுது,                         
பெருமுது பெண்டிர்…………                         (7 - 11)
என்ற அடிகளிலிருந்து, நெல்லையும் முல்லை மலரையும் தூவிப் பெண்டிர் திருமாலை வழிபட்டதாகத் தெரிகிறது.
விரிச்சி கேட்டல்
விரிச்சி என்ற சொல்லுக்கு நல்ல செய்தி என்று பொருள். எதிர்பார்க்கும் ஒரு நிகழ்ச்சி நடைபெற வேண்டும் என்று இறைவனைத் தொழுகின்ற பொழுது, அங்குள்ளவர்கள் எவராவது ஒரு நல்ல செய்தியைச் சொன்னால், அந்த நிகழ்ச்சி நடைபெறும் என்ற நம்பிக்கை சங்க காலத்தில் தமிழகத்தில் இருந்தது என்பது ,
பெருமுது பெண்டிர், விரிச்சி நிற்ப                   (11)
என்ற அடியிலிருந்து தெரிகிறது.

பாசறை அமைப்பு
சங்க காலத்தில், இளவேனிற் காலத்திலும் குளிர் காலத்திலும் போர் நடைபெற்றதாகவும், போர் நடைபெறும் கலத்திற்கேற்ப பாசறை அமைத்து அதில் மன்னனும் படைவீரர்களும் தங்கி இருந்ததாகவும் தொல்காப்பியம் கூறுகிறது.
          கூதிர் வேனில் என்றிரு பாசறைக்
         காதலின் ஒன்றிக் கண்ணிய மரபினும்
(தொல்காப்பியம், புறத்திணை, நூற்பா 21)
முல்லைப்பாட்டில் வேனிற்பாசறையின் அமைப்பு விரிவாகக் கூறப்பட்டிருக்கிறது. காட்டாற்றின் அருகே, புதர்களை அழித்து, வேட்டுவர்களை வென்று, அவர்களின் அரண்களை அழித்து, முள்வேலி அமைத்து, வலியவிற்களை நட்டு, அவற்றின் மேல்  அம்புறாத்தூணிகளைச் செருகி, கூடமாகக் கால்களை நட்டு, அவற்றைக் கயிற்றால் வளைத்துக் கட்டி, பூ வேலைப்பாடு செய்த வேல்களை நட்டு அவற்றில் கேடயங்களை செருகிக் கடல் போன்ற  பாசறையை வீரர்கள் அமைத்தாக முல்லைப்பாட்டு கூறுகிறது.
கான்யாறு தழீஇய அகல்நெடும் புறவில்,
சேண்நாறு பிடவமொடு பைம்புதல் எருக்கி,                         
வேட்டுப்புழை அருப்பம் மாட்டி, காட்ட
இடுமுட் புரிசை ஏமுற வளைஇ,
படுநீர்ப் புணரியின் பரந்த பாடி                               (24 - 28)

 …………… வல்வில் தூணி நாற்றி
கூடம் குத்திக் கயிறுவாங்கு இருக்கை                      
பூந்தலைக் குந்தம் குத்தி, கிடுகுநிரைத்து,
வாங்குவில் அரணம் அரணம் ஆக,                           (39- 42)

போரில் பெண்கள்
பணி புரிவதற்காகப் பாசறையில் பெண்கள் இருந்தாகவும், அவர்கள் தங்களுடைய கச்சில் ஒளிபொருந்திய வாளைச் செருகி இருந்ததாகவும் முல்லைப்பாட்டு கூறுகிறது. அப்பெண்கள் பாசறையில் உள்ள பாவை விளக்கில் ஒளி குறையுந் தோறும் எண்ணெயைவிட்டு நீண்ட திரியைக் கொளுத்தி ஒளிரச் செய்ததாகவும் தெரிகிறது.

திண்பிடி ஒள்வாள்
விரவுவரிக் கச்சின் பூண்ட, மங்கையர்
நெய்உமிழ் சுரையர் நெடுந்திரிக் கொளீஇ,
கைஅமை விளக்கம் நந்துதொறும் மாட்ட,                           (45 – 49)

நாழிகைக் கணக்கர்
நாழிகையைக் கணக்கிட்டுக் கூறுபவர்கள் நாழிகைக் கணக்கர் என்று அழைக்கப்பட்டதாகவும், அவர்கள் பாசறையில் நாழிகையைக் கணக்கிட்டு மன்னனுக்கு அறிவித்ததாகவும், அவர்கள் கன்னல் என்ற ஒருபாத்திரத்தைப் பயன்படுத்தி நாழிகையைக் கணக்கிட்டதாகவும் முல்லைப்பாட்டில் புலவர் நப்பூதனார் குறிப்பிடுகிறார்.
பொழுதுஅளந்து அறியும், பொய்யா மாக்கள்,             
தொழுதுகாண் கையர், தோன்ற வாழ்த்தி,
எறிநீர் வையகம் வெலீஇய செல்வோய்; நின்
குறுநீர்க் கன்னல் இனைத்து’ என்று இசைப்ப  (55 - 58)

யவனர்
இன்றைய துருக்கி நாட்டின் மேற்குப் பகுதி முற்காலத்தில் ஐயோனியா என்று அழைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. கிரேக்கம் மற்றும் ஐயோனியாவைச் சார்ந்த சிலர் பாசறையில் உடனிருந்ததாகவும், அவர்கள் சட்டை அணிந்திருந்தாகவும், அச்சம் தரும் தோற்றமும் வலிமையான உடம்பும் வீரமும் உடையவர்களாகவும், அவர்கள்  புலிச்சின்னம் பொறித்த சங்கிலியைத்  தொங்கவிட்டு மன்னனின் இருப்பிடத்தை அலங்கரித்ததாகவும் முல்லைப்பாட்டில் காண்கிறோம்.
மெய்ப்பை புக்க வெருவரும் தோற்றத்து,                    
வலிபுணர் யாக்கை, வன்கண் யவனர்                       (60 – 61)

மிலேச்சர்
இன்றைய பாகிஸ்தானின் பேற்குப்பகுதியில் உள்ள பெலுச்சிஸ்தான் மாநிலத்திலிருந்து வந்த சிலர் மன்னனுக்கு அருகிலேயே இருந்தாகவும், அவர்கள் சட்டை அணிந்திருந்தாகவும், அவர்கள் வாயால் பேசமுடியாமல் உடம்பால் பேசியாதவும் (தமிழ் மொழி தெரியாததால் சைகையால் பேசியிருக்கலாம்) முல்லைப்பாட்டு கூறுகிறது.
உடம்பின் உரைக்கும், உரையா நாவின்,                    
படம்புகு மிலேச்சர் உழையர் ஆக,                            (65 - 66)


நான்கு வகையான படைகள்
எடுத்துஎறி எஃகம் பாய்தலின், புண்கூர்ந்து,
பிடிக்கணம் மறந்த வேழம் வேழத்துப்
பாம்பு பதைப்பன்ன பரூஉக்கை துமிய,                      (68-70)

என்ற அடிகளிலிருந்து யானைப்படை இருந்ததாகவும்,
                    
தேம்பாய் கண்ணி நல்வலம் திருத்தி,                         (71-72)
சோறுவாய்த்து ஒழிந்தோர்…..
என்ற அடிகளிலிருந்து காலாட்படை இருந்தாகவும்,
 ………………………………………தோல்துமிபு
வைந்நுனைப் பகழி மூழ்கலின், செவிசாய்த்து,
உண்ணாது உயங்கும் மா …….                               (72 -  74)
என்ற அடிகளிலிருந்து குதிரைப்படை இருந்தாகவும்,

வினைவிளங்கு நெடுந்தேர் ….                                      (103)

என்பதிலிருந்து தேர்ப்படை இருந்ததாகவும் அறியமுடிகிறது.

ஆடை வகைகள்
விரவுவரிக் கச்சின் பூண்ட மங்கையர்                           (47)
என்பதிலிருந்து பாசறையில் இருந்த பெண்கள் பலநிறமான கச்சுகள் அணிந்திருந்ததாகவும்,
மெய்ப்பை புக்க வெருவரும் தோற்றத்து,                    
வலிபுணர் யாக்கை, வன்கண் யவனர்                       (60 – 61)
என்ற அடிகளிலிருந்து யவனர் சட்டை அணிந்திருந்ததாகவும்,
உடம்பின் உரைக்கும், உரையா நாவின்,                    
படம்புகு மிலேச்சர் உழையர் ஆக,                            (65 - 66)
என்ற அடிகளிலிருந்து மிலேச்சர்கள் சட்டை அணிந்திருந்ததாகவும்,
அதிரல் பூத்த ஆடுகொடிப் படாஅர்
சிதர்வரல் அசைவளிக்கு அசைவந் தாங்கு,
துகில்முடித்துப் போர்த்த தூங்கல் ஓங்குநடைப்                   
பெருமூ தாளர் ஏமம் சூழ                                        (51 - 54)
என்ற அடிகளிலிருந்து காவலாளர்கள் வெண்ணிறமான துணியால் தலைப்பாகை அணிந்து தங்கள் உடலைப் போர்த்தி இருந்தாகவும் அறிகிறோம்.

போர்க் கருவிகள்
வில் (39), குந்தம் (கைவேல்) (41), கிடுகு (கேடயம்) ( 41), வாள் ( 46), வேல் (68), பகழி (அம்பு) (73) போன்ற போர்க்கருவிகள் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. மற்றும், போரில்  வெற்றி பெற்றதை அறிவிக்க முரசு ( 79), வயிர் (ஊதுகொம்பு) (92) , வளை (சங்கு) (92) போன்ற இசைக்கருவிகளைப் பயன்படுத்தியதாக் காணமுடிகிறது.

Comments

Popular posts from this blog

முல்லைப்பாட்டு மூலமும் உரையும்

முல்லைப்பாட்டு – அறிமுகம்

முல்லைப்பாட்டில் உவமைகள்