தொல்காப்பியமும் முல்லைப்பாட்டும்


தொல்காப்பியமும் முல்லைப்பாட்டும்

தமிழ் மொழியின் தொன்மை
இன்று வழக்கில் இருக்கும் மிகப் பழமையான மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று என்பது மொழியியல் அறிஞர்களின் கருத்து. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள நூல்களில் மிகப் பழைமையானது தொல்காப்பியம். தொல்காப்பியம் கி. மு. மூன்றாம் நூற்றாண்டில் தொல்காப்பியரால் எழுதப்பட்ட நூல்[1]. அந்த நூலில், இருநூறுக்கும் மேலான இடங்களில், தொல்காப்பியர், “என்ப”, “மொழிப”, ”கூறுப”, “என்மனார் புலவர்என்று மற்ற இலக்கண நூல்களைச் சுட்டிக் காட்டுகிறார்.  இதிலிருந்து, தொல்காப்பியத்துக்கு முன்னரே பல இலக்கண நூல்கள் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. எள்ளிலிருந்து எடுக்கப்படுவதுதான் எண்ணெய். அதுபோல், இலக்கியம் இருந்தால்தான் இலக்கணம் இருக்க முடியும். ஆகவே, கி. மு. மூன்றாம் நூற்றண்டுக்குமுன் தமிழில் இலக்கியம் இருந்திருக்க வேண்டும். அந்தக் காலத்தில் தமிழில் உரைநடை நூல்கள் இல்லை. தமிழில் இருந்த இலக்கியம் எல்லாம் செய்யுள் வடிவத்தில்தான் இருந்தன.
சங்க இலக்கியம்
சங்க காலம் என்பது கி.மு. 500 முதல் கி.பி. 200 வரை என்பதைப் பொதுவாகப் பெரும்பாலோர் ஏற்றுக்கொள்கின்றனர்.[2] சங்க காலத்தில் இருந்த இலக்கியம் சங்க இலக்கியம் என்று அழைக்கப்படுகிறது. சங்க காலத்தில் இயற்றப்பட்ட பாடல்களை நூல்களாகத் தொகுக்குமாறு பிற்கால மன்னர்கள்  புலவர்களுக்கு ஆணையிட்டனர். அதற்கேற்ப, சங்க காலத்தில் இருந்த பாடல்களில் நீண்ட பாடல்களாக இருந்த பத்துப் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, புலவர்கள் பத்துப்பாட்டு என்று அழைக்கப்படும் பத்து நூல்களாக்கினார்கள். மூன்று முதல் 140 அடிகளுடைய  பாடல்களில் சிறந்தவற்றை எட்டு நூல்களாகத் தொகுத்தார்கள். எட்டுத்தொகை என்ற சொல் இந்த எட்டு நூல்களையும் குறிக்கிறது. பத்துப்பாட்டில் அடங்கிய பத்து நூல்களும் எட்டுத்கொகையில் அடங்கிய எட்டு நூல்களும் சங்க இலக்கியம் என்று அழைக்கப்படுகின்றன. சங்க இலக்கியத்தில் உள்ள பாடல்கள் தொகுக்கப்பட்ட காலத்தைப் பற்றி அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. எட்டுத்தொகை நூல்கள் தொகுக்கப்பட்ட காலம் கி.பி. முதல் அல்லது கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்று பேராசிரியர் மு. வரதராசன்[3] குறிப்பிடுகிறார். எட்டுத்தொகை நூல்கள் தொகுக்கப்பட்ட காலம் கி.பி ஏழாம் நூற்றாண்டு அல்லது எட்டாம் நூற்றாண்டாக இருக்கலாம் என்று ஈவா வில்டன் கருதுகிறார்.[4]
எட்டுத்தொகை நூல்கள்
 நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகிய எட்டு நூல்களும் எட்டுத்தொகை என்று அழைக்கப்படுகின்றன.   கீழ்வரும் பாடலில் எட்டுத்தொகை நூல்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை.
எட்டுத்தொகை நுல்களில், நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு ஆகிய ஐந்து நூல்களும் அகத்திணையைச் சார்ந்தவை. புறநானூறு மற்றும் பதிற்றுப்பத்து ஆகிய இரண்டும் புறத்திணையைச் சார்ந்தவை. அகமும் புறமும் கலந்தது பரிபாடல்.
எட்டுத்தொகையில் அடங்கிய ஒவ்வொரு நூலும் பலரால் பல காலகட்டங்களில் எழுதப்பட்ட செய்யுள்களின் தொகுப்பு. இத்தொகையுள் ஏறத்தாழ 2436 பாடல்களை  ஏறத்தாழ 473 புலவர்கள் பாடியுள்ளனர். இவர்களில் 25 அரசர்களும், 30 பெண்பாற் புலவர்களும் உள்ளனர். ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்களின் எண்ணிக்கை 102.
பத்துப்பாட்டு
கீழ்வரும் பாடலில் பத்துப்பாட்டு நூல்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வள மதுரைக் காஞ்சி - மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து.
பத்துப்பாட்டு நூல்கள்: திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநெல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம். இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம் ஆகிய ஐந்து நூல்களும் ஆற்றுப்படை[5] என்னும் வகையைச் சார்ந்தவை. இந்த ஐந்து ஆற்றுப்படை நூல்களும் மதுரைக் காஞ்சியும் புறத்திணையைச் சார்ந்தவை. முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு மற்றும் பட்டினப்பாலை ஆகியவை அகத்திணையைச் சார்ந்தவை. நெடுநல்வாடை அகத்திணையைச் சார்ந்ததா அல்லது புறத்திணையைச் சார்ந்ததா என்பது ஆய்வுக்குரியது. பத்துப்பாட்டில் உள்ள பாடல்களுள் முல்லைப்பாட்டு 103 அடிகளை உடைய மிகச் சிறிய பாடலாகும்; மதுரைக் காஞ்சி 782 அடிகளை உடைய மிகப் பெரிய பாடலாகும்.

தொல்காப்பியத்திலிருந்து சில கருத்துகள்
இசை, நாட்டியம், சிற்பம், ஓவியம் போன்ற கலைகளை ரசிப்பதற்கு அந்தக்கலைகளைப் பற்றிய செய்திகளை ஓரளவுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அந்தக் கலைகளைப் பற்றித் தெரியாவிட்டால், நம்மால் அவற்றை ஆழ்ந்து ரசிக்க முடியாது. முல்லைப்பாட்டு போன்ற செய்யுட்கள் முற்றிலும் தொல்காப்பியத்தைத் தழுவி எழுதப்பட்டுள்ளதால், அவற்றை ஆழ்ந்து ரசிப்பதற்கும், அவற்றிலுள்ள பல நுணுக்கங்களைப் புரிந்துகொள்வதற்கும், ஒரளவுக்குத் தொல்காப்பியத்தைப் படித்துப் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நோக்கத்தோடு, தொல்காப்பியத்தில் உள்ள பொருளதிகாரத்திலிருந்து சில கருத்துகள் இங்கு கூறப்பட்டிருக்கின்றன.
அகத்திணையும் புறத்திணையும்
பாடல்களை அகத்திணைப் பாடல்கள் புறத்திணைப் பாடல்கள்  என்று இருவகையாகத் தொல்காப்பியம் பிரிக்கிறது. திணை என்ற சொல் நிலம்’, ‘இடம்’, ’குடி’, ‘ஒழுக்கம்’, ‘பொருள்என்ற பல பொருட்களையுடைய ஒருசொல். தமிழ் இலக்கியத்தில் திணை என்ற சொல் பொருள்என்பதைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. மனித வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகளை அகம், புறம் என்று பிரிப்பது தமிழ் இலக்கண மரபு. ஒருஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலிக்கும் பொழுதும், அவர்களின் திருமணத்திற்குப் பிறகும், தங்கள் வாழ்க்கையில் அவர்கள் அனுபவிக்கும் இன்பமும் துன்பமும் பற்றிய செய்திகள் வெளிப்படையாகப் பிறரிடம் பகிர்ந்து கொள்ள முடியாதவையாகையால், அவை அகப்பொருள் எனப்படும். அகப்பொருளைப்பற்றிப் பாடும் பாடல்கள் அகத்திணையில் அடங்கும். காதலைத் தவிர வாழ்க்கையின் மற்ற கூறுபாடுகள் புறப்பொருள் எனப்படும். போர், வீரம், வெற்றி, புகழ், கொடை, நிலையாமை முதலிய பொருட்களை மையமாகக்கொண்ட பாடல்கள் புறத்திணையில் அடங்கும்.
அகத்திணைப் பாடல்கள் ஏழு அகத்திணைகளுள் அடங்கும். அவை கைக்கிளை, குறிஞ்சி, முல்லை, பாலை, நெய்தல், மருதம், பெருந்திணை ஆகும். அதுபோல், புறத்திணைப் பாடல்கள் வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் ஆகிய ஏழு திணைகளுள் அடங்கும்  என்று தொல்காப்பியம் கூறுகிறது. அகத்திணையில் உள்ள ஒவ்வொரு திணைக்கும் புறத்திணையில் ஒரு இணையான துணை உண்டு என்றும் தொல்காப்பியம் கூறுகிறது,
அகத்திணையின் ஏழு திணைகள்
கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்
முற்படக் கிளந்த எழுதிணை என்ப.            (தொல்காப்பியம் - 947) 
அகத்திணையைச் சார்ந்த திணைகளை கைக்கிளை, முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல், பெருந்திணை  என்று ஏழுதிணைகளாகத் தொல்காப்பியம் பிரிக்கிறது. முதலாவதாகக் கூறப்பட்ட கைக்கிளை என்பது ஒருதலைக் காதலையும், இறுதியில் கூறப்பட்ட பெருந்திணை என்பது பொருந்தாக் காதலையும் குறிக்கிறது. இடையில் உள்ள ஐந்து திணைகள்  - முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் ஆகிய ஐந்து திணைகள் அன்புடன் கூடிய காதல் வாழ்க்கையைப் பற்றிப் பாடுவதற்கு ஏற்ற திணைகளாகவும் கருதப்பட்டன.
அகத்திணைப் பாடல் மரபுகள்
அகத்திணையைக்குரிய குறிஞ்சி, முல்லை பாலை, மருதம் மற்றும் நெய்தல் ஆகிய ஐந்திணைகளைச் சார்ந்த பாடல்களில் எவருடைய இயற்பெயரும் குறிப்பிடுவதில்லை  என்று தொல்காப்பியம் கூறுகிறது.  

          மக்கள் நுதலிய அகன்ஐந் திணையும்
சுட்டி ஒருவர்ப் பெயர்கொளப் பெறாஅர்.
                                    (தொல்காப்பியம், 1000)
காதலன், கணவன் ஆகியோரைத் தலைவன் என்றும் காதலி, மனைவி ஆகியோரை தலைவி என்றும் குறிப்பிடுவது வழக்கம்.

மூன்றுவகைப் பொருள்கள்
காதல் வாழ்க்கையைப் பற்றிப் பாடப்படும் அகத்திணைப் பாடல்களில் மூன்று வகையான பொருள்களைப் பற்றிப் பாடலாம் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. அவை முதற்பொருள், கருப்பொருள் மற்றும் உரிப்பொருள் என்று அழைக்கப்படுகின்றன.
முதல்கரு உரிப்பொருள் என்ற மூன்றே
நுவலுங் காலை முறைசிறந் தனவே
பாடலுள் பயின்றவை நாடுங் காலை                        (தொல்காப்பியம் - 949)

அகத்திணைப் பாடல்களில் வரும் பொருள்களை ஆராயுமிடத்து முதற்பொருள், கருப்பொருள் உரிப்பொருள் என்ற மூன்று பொருள்கள் வரும். இவை ஒன்றோடு ஒன்று சிறந்தவையாக அமையும். முதலைவிடக் கரு சிறந்தது; கருவைவிட உரி சிறந்தது.
முதற்பொருள் என்பது நிலத்தையும் காலத்தையும் குறிக்கிறது.
முதலெனப் படுவது நிலம்பொழுது இரண்டின்
இயல்பென மொழிப இயல்புணர்ந்தோரே.                 (தொல்காப்பியம் – 950)

தமிழகத்தின் நிலப்பரப்பைத் தொல்காப்பியம் ஐந்தாகப் பிரிக்கிறது. அவை முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம் நெய்தல் என்று அழைக்கப்படுகின்றன. கீழே உள்ள அட்டவணையில் ஒவ்வொரு திணைக்கும் உரிய இடம், பெரும்பொழுது மற்றும்  சிறுபொழுது ஆகியவைக் குறிப்பிடப்பட்டுள்ளன.
திணை
இடம்
பெரும்பொழுது
சிறுபொழுது
குறிஞ்சி
மலையும் மலை சார்ந்த இடமும்
குளிர்காலம் (ஐப்பசி, கார்த்திகை மாதங்கள்) முன்பனிக்காலம்(மார்கழி, தை மாதங்கள்)
யாமம்
(இரவு 10 மணி முதல் இரவு 2 மணிவரை)
முல்லை
காடும் காடு சார்ந்த இடமும்
கார்காலம்(ஆவணி, புரட்டாசி மாதங்கள்), 
மாலை(மாலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை),
மருதம்
வயலும் வயல் சார்ந்த இடமும்
எல்லா மாதங்களும்
வைகறை(இரவு 2 மணி முதல் காலை 6 மணிவரை) விடியல்
நெய்தல்
கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல்
எல்லா மாதங்களும்
எற்பாடு( மதியம் 2 மணி முதல் மாலை 6 மணிவரை)
பாலை
முல்லை நிலமும் குறிஞ்சி நிலமும் மழையின்மையால் வறட்சி அடைந்த இடம்
முதுவேனில்(ஆனி, ஆடி  மாதங்கள்), பின்பனி (மாசி, பங்குனி மாதங்கள்)
நண்பகல்(காலை 10 மணிமுதல் மதியம் 2 மணிவரை)
கருப்பொருள்: கருப்பொருள் என்ன என்பதற்குத் தொல்காப்பியம் விளக்கம் அளிக்கிறது.

தெய்வம் உணாவே மாமரம் புள்பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகை பிறவும் கருஎன மொழிப.       (தொல்காப்பியம் - 964)

தெய்வம், உணவு, விலங்கு, மரம், பறவை, பறை, தொழில், யாழ் (பண்) ஆகியவையும் பிறவும் கருப்பொருள்கள் எனப்படும். முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், மற்றும் நெய்தல் ஆகிய நிலங்களுக்கு, அங்கு வளரும் மரம், செடி, கொடிகளும், விலங்குகளும், வாழும் மக்களும், வணங்கப்படும் தெய்வங்களும் அந்த நிலத்திற்கு உரிய கருப்பொருள்களாகக் கருதப்பட்டன. நிலங்களும் அவற்றிற்குரிய  சில கருப்பொருள்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
               ஐவகை நிலங்களும் அவற்றிற்குரிய சில கருப்பொருள்களும்
கருப்பொருள்
குறிஞ்சி
முல்லை
மருதம்
நெய்தல்
பாலை
தெய்வம்
முருகன்
திருமால்
இந்திரன்
வருணன்
கொற்றவை
விலங்கு
யானை, புலி
கரடி
மான், முயல்
எருமை, நீர்நாய்
முதலை
சுறாமீன்
வலிமையற்ற
யானை, புலி
உணவு
தினை, மூங்கில்நெல்
வரகு
நெல்
உப்பும் மீனும் விற்று வாங்கிய உணவு
வழிப்பறி செய்த உணவுப் பொருள்
மரம்
வேங்கை, கோங்கு, தேக்கு, அகில்
கொன்றை, குருந்து
மருது, காஞ்சி
புன்னை, கைதை
பாலை, இருப்பை, கள்ளி, சூரை
பறவை
மயில், கிளி
கானாங் கோழி
அன்னம், அன்றில்,
கடற்காக்கை
கழுகு, பருந்து
பறை
வெறியட்டுப் பறை, தொண்டகப் பறை
ஏறுகோட் பறை
நெல்வரிப்பறை
நாவாய்ப்பறை
ஆறலைப்பறை
தொழில்
தேன் எடுத்தல்
நிரை மேய்த்தல்
உழவு
மீன் பிடித்தல், உப்பு விளைத்தல்
வழிப்பறி செய்தல்
பண்
குறிஞ்சிப் பண்
சாதாரிப் பண்
மருதப் பண்
செவ்வழிப் பண்
பாலைப் பண்
பூ
வேங்கைப் பூ, காந்தள் பூ, குறிஞ்சிப் பூ
முல்லை, பிடவு, தளவு
தாமரை,
செங்கழு நீர்
நெய்தல்
மராஅம் பூ

உரிப்பொருள்: ஒவ்வொரு திணைக்கும் குறிப்பிட்ட கருப்பொருள்கள் இருப்பதைப் போல், உரிப்பொருள்களும் வகுக்கப்பட்டுள்ளன.
புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்
ஊடல் இவற்றின் நிமித்தம் என்றிவை
தேரும் காலை திணைக்கு உரிப்பொருளே. (தொல்காப்பியம் - 960)
புணர்தல் என்பதற்கு கூடுதல் அல்லது சேர்தல் என்று பொருள். இது ஒரு ஆணும் பெண்ணும் ஊழ்வினைப் பயனால் சந்தித்து, ஒருவரை ஒருவர் பார்த்துக் கண்பார்வையினால்  தம் விருப்பத்தைப் பரிமாறிக் கொள்வது, பின்னர் ஒருவரோடு ஒருவர் பழக ஆரம்பித்துப் பெற்றோர்களுக்குத் தெரியாமல் காதலிப்பது ஆகிய நிகழ்ச்சிகளைக் குறிக்கிறது.
பிரிதல்  காதலன் தன் காதலியைவிட்டுத் திருமணத்திற்குப் பொருள் தேடுவதற்காகப் பிரிவதையும், கணவன், பொருளுக்காகவும், போருக்காகவும், கல்விக்காகவும், அரசன் ஏவிய பணிகளுக்காகவும், பரத்தையோடு தொடர்பு கொள்வதற்காகவும்  தன் மனைவியை விட்டுப் பிரிவதையும்  குறிக்கிறது. பிரிதல் என்பது தலைவன் தலைவியைவிட்டுச் சில மாதங்கள் பிரிந்திருப்பதைக் குறிக்கிறதே ஒழிய நிரந்தரமான பிரிவைப் பற்றியது அன்று. எல்லாச் சூழ்நிலைகளிலும் பிரிந்தவர் மீண்டும் கூடுவது இலக்கிய மரபு.  உடன்போக்கின் பொழுது காதலர்கள் தங்கள் பெற்றோரையும் உற்றோரையும் விட்டுப் பிரிந்து செல்லும் உடன்போக்கும் ஒருவகைப் பிரிவாகக் கருதப்பட்டது.
இருத்தல் என்பது காதலன் தன் காதலியைவிட்டுப் பிரிந்திருக்கும் பொழுதும், கணவன் மனைவியை விட்டுப் பிரிந்திருக்கும் பொழுதும், காதலி அல்லது மனைவி வருத்தத்தோடு, அந்தப் பிரிவின்போது,  பொறுமையுடன் தன் காதலன் (கணவன்) வரவுக்காகப் காத்திருத்தல்.
இரங்கல் என்பது தன் காதலன் (கணவன்) குறிப்பிட்ட  காலத்தில் வரத் தவறியதால், மனம் வருந்தி, உடல் மெலிந்து, அழுது தன் வருத்தத்தை வெளிபடுத்துவதைக் குறிக்கிறது.
ஊடல் என்பது கணவன் மீது ஏதாவது ஒரு காரணதிற்காக மனைவி விளையாட்டுக்காக கோபமாக இருப்பதைக் குறிக்கிறது. கணவன் பரத்தையரோடு தொடர்புகொள்வதுவே ஊடலுக்கு முக்கியமான காரணம் என்று அகத்திணைப் பாடல்களில் இருந்து தெரிகிறது.
குறிஞ்சித்திணைக்குப் புணர்தலும், பாலைத்திணைக்குப் பிரிதலும், முல்லைத்திணைக்கு இருத்தலும்,  நெய்தற் திணைக்கு இரங்கலும், மருதத்திணைக்கு ஊடலும் உரிப்பொருள்கள் என்று தொல்காப்பியம் கூறுகிறது. புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல்,  ஊடல் மட்டுமல்லாமல் அவற்றோடு  தொடர்புடைய கருத்துகளும் நிகழ்வுகளும்(நிமித்தங்களும்) முறையே குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் ஆகிய திணைகளுக்கு உரிய உரிப்பொருள்களாகும்.
ஒவ்வொரு அகத்திணைப் பாடலும், கைக்கிளை, முல்லை,குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல், பெருந்திணை ஆகிய திணைகளில் ஏதாவது ஒன்றைச் சார்ந்ததாக இருக்கும். அப்பாடல் எந்தத் திணையைச் சார்ந்தது என்பதை அதிலுள்ள முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருளைக் கொண்டு முடிவு செய்ய வேண்டும். ஒரு பாடலில் முதற்பொருளும், கருப்பொருளும் உரிப்பொருளும்  இருந்தால், முதற்பொருளைக் கொண்டு, அது எந்தத் திணையைச் சார்ந்தது என்று முடிவு செய்ய வேண்டும்.  ஒருபாடலில் முதற்பொருள் இல்லாமல் கருப்பொருளும் உரிப்பொருளும் மட்டும் இருந்தால் கருப்பொருளை வைத்துத் திணையை முடிவு செய்ய வேண்டும். அகத்திணையிலுள்ள எல்லாப் பாடல்களிலும் உரிப்பொருள் கண்டிப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத் தக்கது. கைக்கிளைக்கும் பெருந்திணைக்கும் முதற்பொருளும் கருப்பொருளும் குறிப்பிடப்படவில்லை. பாடலின் மையக் கருத்து  ஒருதலைக் காதலாக  இருந்தால், அப்பாடல் கைக்கிளையைச் சார்ந்தது என்றும், பொருந்தாக் காதல் மையக் கருத்தாக இருந்தால் அப்பாடல் பெருந்திணையைச் சார்ந்தது என்றும் திணை குறிக்க  வேண்டும்.
தொல்காப்பியம் கூறும் புறத்திணைகள்
புறத்திணைப் பாடல்கள் வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் ஆகிய ஏழு திணைகளுள் அடங்கும்  என்று தொல்காப்பியம் கூறுகிறது.
வெட்சித் திணை: வீரர் அரசனுடைய ஆணையைப் பெற்றும், பெறாமலும், பகைவர்களின் பசுக்களைக் கவர்ந்து வருதல்.
வஞ்சித் திணை: வஞ்சிப் பூவைத் தலையில் சூடிப் பகைவரின் நாட்டைக் கைக்கொள்ளக் கருதிச் செல்லுதல்.
உழிஞைத் திணை: பகைவர் நாட்டின் மீது படையோடு சென்று மதிலை வளைத்துப் போரிடுதல்.
.தும்பைத் திணை: தும்பைப் பூவைச் சூடிப் பகைவரோடு போர் செய்தல்.
வாகைத் திணை: வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தல்.
காஞ்சித் திணை: பகையரசன் போருக்கு வந்துவிட ஓரரசன் காஞ்சிப் பூவைச் சூடித் தன்னிடத்தைப் பாதுகாத்தல்.
பாடாண் திணை: ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுதல்.

அகத்திணைகளும் அவற்றிற்கு இணையான புறத்திணைகளும்
குறிஞ்சித்திணைக்கு வெட்சித்திணை, முல்லைத்திணைக்கு வஞ்சித்திணை, மருதத்திணைக்கு உழிஞைத்திணை, நெய்தல் திணைக்குத் தும்பைத்திணை, பாலைத்திணைக்கு வாகைத்திணை, கைக்கிளைத்திணைக்குப் பாடாண்திணை மற்றும் பெருந்திணைக்கு காஞ்சித்திணையும் இணையான திணைகள் என்று தொல்காப்பியம் கூறுகிறது.

முல்லைத்திணையும் வஞ்சித்திணையும்
வஞ்சித்திணையாகிய புறத்திணை முல்லைத்திணையாகிய அகத்திணைக்குப் இணையான புறத்திணை என்று தொல்காப்பியம் கூறுகிறது. மற்றவர்களின் நாடெல்லாம் தனக்கே வேண்டுமென்று நினைத்துப் போருக்குச் சென்ற வேந்தனை, ஒரு மன்னன் அஞ்சாது எதிர் சென்று போர் செய்ய முற்படுவதை வஞ்சித்திணை குறிப்பிடுகிறது. இதனைத் தொல்காப்பியர்,
வஞ்சி தானே முல்லையது புறனே
எஞ்சா மண்நசை வேந்தனை வேந்தன்
அஞ்சுதகத் தலைச்சென்று அடல்குறித் தன்றே
(புறத்திணையில்,6)
என்று கூறுகிறார்.
வஞ்சித்திணையை முல்லைத் திணைக்குப் புறமாகக் கூறியதற்கு வேறொரு காரணமும் உண்டு.
படையெடுத்துச் செல்லும்போது படைவீரர்கள் இளைப்பாறவும் நீர் அருந்தி, உணவு சமைத்து உண்ணவும், நிழலுள்ள இடம் தேவைப்படும். முல்லைநிலத்தில் உள்ள காடு, படைவீரர்களுக்குத் தேவையான நிழலையும் நீரையும் தருவதால் முல்லைக்கு வஞ்சி புறத்திணையாயிற்று. மேலும் தலைவனுக்காகக் காத்திருக்கும் தலைவியின் நிலை, போர்க்களத்தில் மனைவியைப் பிரிந்து வெற்றிக்காகக் காத்திருக்கும் வீரனுக்கு ஒத்திருப்பதாலும், வஞ்சித்திணை முல்லைத்திணைக்கு இணையான புறத்திணையாகக் கருதப்படுகிறது.
முல்லைப்பாட்டு
முல்லைபாட்டில் தலைவன் தலைவி
அகத்திணைப் பாடலுக்குத் தொல்காப்பியம் குறிக்கும் இலக்கணத்தை முழுமையாகப் பின்பற்றி முல்லைபாட்டு எழுதப்பட்டுள்ளது. அகத்திணைப் பாடல்களில் பாட்டுடைத் தலைவன் தலைவி ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிடுவதில்லை என்று தொல்காப்பியம் கூறுவதற்கு இணங்க, முல்லைப்பாட்டில் தலைவன் தலைவி ஆகியோரின் பெயரைக் குறிப்பிடாமல், அவர்களை, ”மாயோய்”, ”தலைவர்என்று மட்டுமே புலவர் நப்பூதனார்குறிப்பிடுகிறார். முல்லைப்பாட்டில் தலைவன் தலைவி ஆகியோரின் பெயர்கள் கூறப்படவில்லை என்றாலும், அது தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சியை மையக் கருத்தாகக்கொண்ட பாடல் என்று சிலர் கருதுகின்றனர். ஆனால், அதற்கான குறிப்புகள் முல்லைப்பாட்டில் காணப்படவில்லை.
முல்லைப்பாட்டில் முப்பொருள்கள்
உரிப்பொருள்: ஒவ்வொரு அகத்திணைப் பாடலிலும் உரிப்பொருள் இருக்க வேண்டும் என்பது தொல்காப்பியம் கூறும் இலக்கணம். அதற்கேற்ப, முல்லைபாட்டில், உரிப்பொருளாக ”இருத்தல்அமைந்துள்ளது. அதாவது, போருக்குச் சென்ற தலைவனைப் பிரிந்து, அவன் வருகைக்காகத் தலைவி காத்திருக்கிறாள். உரிப்பொருள் மட்டுமல்லாமல், முல்லைத்திணைக்கேற்ற முதற்பொருள்களும், கருப்பொருள்களும் முல்லைப்பாட்டில் அமைந்துள்ளன.
முதற்பொருள்: முதற்பொருள் என்பது இடத்தையும் பொழுதையும் குறிக்கும். ‘‘கான்யாறு தழீஇய இகனெடும் புறவு (24)’’, ‘‘கானம் நந்திய செந்நிலப் பெருவழி (97)’’, ‘‘முதிர்காய் வள்ளியங்காடு (101)” என்ற அடிகளிலிருந்து, முல்லைத்திணைக்குரிய காடும் காடு சார்ந்த இடமும் குறிப்பிடப்படுகின்றன என்பது தெரியவருகிறது. ‘‘எதிர்செல் வெண்மழை பொழியும் திங்கள் (100)’’என்ற அடியில்  முல்லைத்திணைக்குரிய பெரும்பொழுதாகிய  கார்காலத்தைப்  புலவர் நப்பூதனார் குறிப்பிடுகிறார். ‘‘பெரும்பெயல் பொழிந்த சிறுபுன்மாலை (6)’’ என்ற சொற்றொடர், முல்லைத்திணைக்குரிய சிறுபொழுதாகிய மாலைக்காலத்தைக் குறிக்கிறது. ஆகவே, முல்லைத்தினைக்குரிய இடம், பொழுது ஆகிய  இரண்டும் முல்லைப்பாட்டில் இடம்பெற்றுள்ளன.

கருப்பொருள்: ‘‘நனந்தலை உலகம் வளைஇ நேமியோடு(1)”, ”வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை(2)”, ”நீர்செல நிமிர்ந்த மாஅல் (3)’’ என்ற அடிகளில் முல்லைத்திணைக்குரிய கடவுளாகிய திருமாலைப் பற்றிய செய்தி கூறப்பட்டுள்ளது. ‘‘வானம் வாய்த்த வாங்கு கதிர்வரகு (98)’’ என்ற அடியில், முல்லைத்திணைக்குரிய வரகு பற்றிய செய்தி முல்லைப்பாட்டில் இடம்பெற்றுள்ளது. ‘‘சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்று (12)’’, ‘‘திரி மருப்பு இரலையோடு மடமான் உகள (99) ’’, ”ஏவுறு மஞ்ஞையின் நடுங்கி (84)” என்ற வரிகளில் பசுங்கன்று, இரலை (ஆண்மான்), மடமான் (பெண்மான்), மஞ்ஞை (மயில்) ஆகிய முல்லைத்திணைக்குரிய விலங்குகளைப் பற்றிய செய்திகளைக் காணலாம்.
முல்லை, காயா, கொன்றை, கோடல், தோன்றி ஆகிய முல்லை நிலத்து மலர்கள் முல்லைப்பட்டில் இடம்பெற்றுள்ளன என்ற செய்தி,
நாழி கொண்ட நறுவீ முல்லை (9)
என்ற அடியிலிருந்தும்
         
செறியிலைக் காயா அஞ்சன மலர
முறியிணர்க் கொன்றை நன்பொன் காலக்
கோடல் குவிமுகை அங்கை அவிழத்
தோடார் தோன்றி குருதி பூப்ப  (93-96)

என்ற அடிகளிலிருந்தும் தெரிகிறது.
நப்பூதனார் இம்முல்லைப்பாட்டை 103 அடிகளில் பாடியிருப்பினும் முல்லைக்குரிய முதல், கரு, உரிப் பொருள்களை முழுமையாகப் படைத்திருப்பது சிறப்பிற்குரியது.
முல்லையும் வஞ்சியும்
நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு” (1) என்ற முதலடியில் தொடங்கி, ”பூப்போல் உண்கண் புலம்பு முத்துறைப்ப” (23) எனமுடியும் 23 - ஆம் அடிவரையிலும், பின்னர் “இன் துயில் வதியுநன் காணாள் துயர் உழந்து” (80) எனத்தொடங்கும் அடி முதலாக ”வினைவிளங்கு நெடுந்தேர் பூண்ட மாவே” (103) என்ற இறுதி அடி வரையிலான 24 அடிகளிலும், தலைவி முல்லைத்திணைக்குரிய ஆற்றியிருக்கும் பண்பினை புலவர் நப்பூதனார் மிக அழகாகச் சித்திரிக்கிறார்.  ஆனால்,  கான்யாறு தழீஇய அகன்நெடுப் புறவு” (24) தொடங்கி,  அரசு இருந்து பனிக்கும் முரசு முழுங்கு பாசறை” (79) முடிய 56 அடிகளில் முல்லைத்திணைக்கு இணையான புறத்திணையாகிய வஞ்சித் திணையின் கருத்துகள் காணப்படுகின்றன. இவ்வாறு, புலவர் நப்பூதனார் முல்லைத்திணையும் வஞ்சித்திணையும் கலந்து முல்லைப்பாட்டை இயற்றியிருப்பது  அவருடைய புலமைக்குச் சான்றாகவும் முல்லைப்பாட்டின் தனிச் சிறப்பாகவும் விளங்குகிறது.


[1] மு. வரதராசன், தமிழ் இலக்கிய வரலாறு, பக்கம் 5
[2] டாக்டர் பூவண்ணன், தமிழ் இலக்கிய வரலாறு, பக்கம் - 14
[3] மு. வரதராசன், தமிழ் இலக்கிய வரலாறு, பக்கம் - 28
[4] Eva Wilden, குறுந்தொகை, பக்கம் - 1
[5] வள்ளல் ஒருவரிடம் தன் வறுமையைப் போக்கும் வளங்களைப் பெற்றுவந்த ஒருவர். கூத்தர், பாணர், பொருநர், விறலி முதலியோரை அவரிடம் செல்லுமாறு வழி சொல்லி அனுப்புவது ஆற்றுப்படை என்று தொல்காப்பியம் கூறுகிறது.


Comments

Popular posts from this blog

முல்லைப்பாட்டு மூலமும் உரையும்

முல்லைப்பாட்டு – அறிமுகம்

முல்லைப்பாட்டில் உவமைகள்